காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சதீஷ் சிவலிங்கம், ரகலா வெங்கட் ராகுல், அஜய் சிங், ராகவா வருண், நிருபமா தேவி, நிகிதா காலே ஆகியோர் தங்களது பிரிவில் தங்கப் பதக்கமும், அபிஷேக் பூனியா வெண்கலமும் வென்றனர்.

இதையடுத்து, 2018-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்கான தங்களது வாய்ப்பை அவர்கள் உறுதி செய்தனர்.

காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில், இந்தியாவின் சார்பில், தமிழக வீரரான சதீஷ் சிவலிங்கம் சீனியர் ஆடவருக்கான 77 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டார். அதில் ஸ்னாட்ச் பிரிவில் 148 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 172 கிலோ என மொத்தமாக 320 கிலோ எடையைத் தூக்கி அவர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

மற்றொரு இந்தியரான ராகுல் தனது எடைப் பிரிவில் மொத்தமாக 351 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். அத்துடன், ஜூனியர் ஆடவர் பிரிவிலும் அவர் தங்கம் வென்றார்.

இதனிடையே, ஜூனியர் ஆடவர் 77 கிலோ பிரிவில் இந்தியாவின் அஜய் சிங் மொத்தமாக 310 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இளையோர் ஆடவர் பிரிவில் ரகலா வருண் மொத்தமாக 269 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார்.

அதே பிரிவில் அபிஷேக் பூனியா 256 கிலோ எடையை தூக்கி மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.

ஜூனியர் மகளிர் 69 கிலோ பிரிவில் இந்தியாவின் நிருபமா தேவி 178 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

இளையோர் மகளிருக்கான 69 கிலோ பிரிவில் நிகிதா காலே, மொத்தமாக 163 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.