காமன்வெல்த் போட்டியின் பாரா பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மாற்றுத்திறனாளி வீரர் சச்சின் செளத்ரி வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டது.

பாரா பளுதூக்குதல் ஆடவர் ஹெவிவெயிட் பிரிவில் சச்சின் செளத்ரி மூன்றாவது முயற்சியில் 201 கிலோவை தூக்கினார். இதன்மூலம் 188.7 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். 

காமன்வெல்த் பாரா விளையாட்டில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். 35 வயதான சச்சின் துபாயில் நடந்த உலகக் கோப்பை பாரா பளுதூக்குதல் போட்டியில் 200 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது கூடுதல் தகவல்.

நைஜிரியாவின் அப்துல் அஜிஸ் இப்ராஹிம் தங்கமும், மலேசியாவின் யீ கை வெள்ளியும் வென்றனர்.