காமன்வெல்த் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் நடப்புச் சாம்பியன்களான தீபிகா பல்லிக்கல் - ஜோஷ்னா சின்னப்பா அடுத்த ஆட்டத்துக்கு முன்னேறினர். 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

காமன்வெல்த் ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் தீபிகா - ஜோஷ்னா இணை 2-1 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானின் பைசா ஜாபர் - மதினா ஜாபர் இணையை வீழ்த்தியது. 

அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

மற்றொரு பிரிவான கலப்பு இரட்டையர் பிரிவில் பல்லிக்கல் - செளரவ் கோஷல் இணை கயனாவின் மேரி பங் - ஜேசன் ரேயை 11-,3, 11-3 என்ற செட்கணக்கில் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் மதினா ஜாபர் - தய்யப் அஸ்லம் இணையையும் 11-2, 11-3 என்ற செட் கணக்கில் வென்றது. 

மற்றொரு ஆட்டத்தில் ஜோஷ்னா - ஹரீந்தர் பால் கேய்மன் தீவுகளின் கரோலின் - ஜேக்கப் கெல்லி இணையை 11-3, 11-6 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.