காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளு தூக்குதலில் இந்தியா இரண்டாவது தங்கம் வென்று அசத்தியதால் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

இதில், பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது.

அதற்கேற்ப தொடக்க நாளான நேற்று முன்தினம் பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு புதிய சாதனையுடன் முதல் தங்கத்தை வென்றார். ஆடவர் பிரிவில் பி.குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார். 

இந்த நிலையில் போட்டியின் 2-வது நாளான நேற்றும் பளுதூக்குதலில் இந்திய வீரர்கள் தங்கள் முத்திரையை பதித்தனர்.

இதில், பெண்கள் 53 கிலோ எடைப்பிரிவில் சஞ்சிதா சானு ஸ்நாட்ச் பிரிவில் 84 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 108 கிலோவும் என மொத்தம் 192 கிலோ தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். இது இந்தியாவுக்கு இரண்டாவது தங்கமாக அமைந்தது.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சிதாவுக்கு இது காமன்வெல்த் போட்டிகளில் 2-வது தங்கமாகும். கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்ட நிலையில் அவர் தங்கம் வென்றதால், ஆனந்தக் கண்ணீருடன் காணப்பட்டார். 

கடந்த உலக சாம்பியன் போட்டியின் போது முதுகுவலி பாதிப்பு ஏற்பட்டது. இப்போட்டிக்கு 90 சதவீதம் உடல் தகுதியுடனே இருந்ததாக சஞ்சிதா தெரிவித்தார்.