காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது இந்திய மகளிர் அணி.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டது.

காமன்வெல்த் போட்டியின் கடந்த 2 சீசன்களின்போது 5-ஆம் இடத்துடன் நிறைவு செய்துகொண்ட இந்திய அணி, தற்போது புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்துக்கு அடுத்து 2-வது இடத்தில் உள்ளது. எனவே, இந்தியா இம்முறை அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும்.

"ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா நேற்று நடைபெற்ற தனது 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. 

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் அலெக்ஸாண்ட்ரா டேன்சன் ஆட்டம் தொடங்கிய 35-வது விநாடியிலேயே அணிக்கான ஒரே கோலை அடித்தார். எனினும், இந்தியாவின் குர்ஜித் கௌர் 42-வது நிமிடத்திலும், நவ்னீத் கௌர் 48-வது நிமிடத்திலும் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர். 

அதேபோன்று இந்திய ஆடவர் அணியும் தனது 2-வது ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக டிரா செய்திருந்த இந்தியாவுக்கு, இது முதல் வெற்றியாகும். 

இந்தியாவின் சார்பில் தில்பிரீத் சிங் 16-வது நிமிடத்திலும், மன்தீப் சிங் 28-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 57-வது நிமிடத்திலும், சுனில் 59-வது நிமிடத்திலும் கோலடித்தனர். 

வேல்ஸ் அணி தரப்பில் கேரத் ஃபர்லாங் அணிக்கான அனைத்து கோல்களையும் 17, 45, 58-ஆவது நிமிடங்களில் பெனால்டி கார்னர் வாய்ப்புகள் மூலமாக அடித்தார்.

இந்த ஆட்டத்தையும் இந்தியா சமன் செய்யும் என்று எதிர்பார்த்த நேரத்தில், கடைசி நிமிடத்தில் கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தார் சுனில்.