காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அரையிறுதிக்கு அசத்தலாக முன்னேற்றம் கண்டனர். 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். 

இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

இதன் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தானுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. 

இரண்டாவது ஆட்டத்தில் வலு குறைந்த வேல்ஸ் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது.

இதற்கிடையே மூன்றாவது ஆட்டத்தில் மலேசியாவை நேற்று இந்தியா எதிர்கொண்டது. பெனால்டி கார்னர் நிபுணரான ஹர்மன்பீரித் சிங் 3 மற்றும் 44 வது நிமிடங்களில் கோலடித்து அசத்தினார். மலேசியாவின் ஓரே கோலை பைசல் சாரி அடித்தார். 

இந்திய அணியினர் தங்களுக்கு கிடைத்த 9 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தனர். 16-வது நிமிடத்தில் மலேசிய அணி ஒரு கோலடித்து சமன் செய்தது.

22-வது நிமிடத்தில் மந்தீப் சிங் கோலடிக்க மேற்கொண்ட முயற்சியை மலேசிய வீரர்கள் முறியடித்தனர். இந்திய அணி கோல்கீப்பர் ஸ்ரீஜிஷ் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மலேசிய அணி கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகளை தகர்த்தார். 

58-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு மற்றொரு கோலடிக்க வாய்ப்பு கிட்டியது. ஆனால் ஹர்மன்பீரித் சிங் கோலடிக்க மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

மலேசியாவை வென்றதின் மூலம் இந்திய ஆடவர் அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்துடன் ஓர் ஆட்டம் மீதமுள்ளது.

அதேபோன்று, மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. கேப்டன் ராணி ராம்பால் ஓரே கோலை அடித்தார். 

கோல்கீப்பர் சவீதா புனியா, தடுப்பாட்டக்காரர்களின் சிறப்பான ஆட்டத்தால் எதிரணி கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றன. இறுதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.