காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் லான் பௌல்ஸ் போட்டியின் ஃபைனலுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்துள்ளது இந்திய அணி. 

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடிவருகின்றனர். குறிப்பாக பளுதூக்குதலில் பதக்கங்களை குவித்துவருகிறது இந்தியா.

காமன்வெல்த்தில் இதுவரை இந்தியா 6 பதக்கங்களை வென்றுள்ளது. அந்த 6 பதக்கங்களும் பளுதூக்குதலிலேயே கிடைத்துள்ளன.

பளுதூக்குதலில் மீராபாய் சானு, ஜெர்மி மற்றும் அச்சிந்தா ஷூலி ஆகிய மூவரும் தங்கம் வென்றனர். சங்கேத் சர்கார் மற்றும் பிந்தியாராணி தேவி ஆகிய இருவரும் வெள்ளி பதக்கம் வென்றனர். குருராஜா வெண்கலம் வென்றார்.

இந்நிலையில், 7வது பதக்கத்தை லான் பௌல்ஸ் விளையாட்டில் உறுதி செய்துள்ளது இந்திய மகளிர் அணி. லவ்லி சௌபே , பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. அபாரமாக விளையாடிய இந்திய மகளிர் அணி, 16-13 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது.

ஃபைனலில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. ஃபைனலுக்கு முன்னேறியதன் மூலம் இந்தியவிற்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. ஃபைனலில் ஜெயித்தால் தங்கம், தோற்றால் வெள்ளி பதக்கம் உறுதி.

காமன்வெல்த்தில் லான் பௌல்ஸில் முதல் முறையாக பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்துள்ளது இந்திய மகளிர் அணி.