காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் மேரி கோம் அரையிறுதிக்கு முன்னேறியதால் இந்தியாவுகு பதக்கம் உறுதியாகி உள்ளது. 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டது.

காமன்வெல்த் போட்டியில் மேரி கோம் பங்கேற்பது இது முதல் முறையாகும். மேரி கோம் தனது காலிறுதியில் ஸ்காட்லாந்தின் மீகன் கார்டனை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.  இதன்மூலமாக இந்த காமன்வெல்த் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் உறுதியாகியுள்ளது.

அதேபோல, ஆடவருக்கான 75 கிலோ பிரிவில் விகாஸ் கிருஷன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் பிரிவில் விகாஸ் கிருஷன் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் கேம்ப்பெல் சாமர்வில்லேவை வெற்றி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.