ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் பேசும்போது கவனமாகவும் நிதானமாகவும் பேசுமாறு கேப்டன் விராட் கோலிக்கு பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு அறிவுறுத்தியுள்ளது. 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரும் சாதனைகளின் நாயகனுமான கோலி, பொறுமையும் நிதானமும் போதாவர். களத்தில் ஆக்ரோஷமாக இருப்பது சரி. ஆனால் பொதுவெளியிலும் பொறுமையில்லாமல் பேசுவது அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்துகிறது. 

அதுமாதிரியான ஒரு சர்ச்சையில் அண்மையில் சிக்கினார் கோலி. ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விராட் கோலி அளித்த பதில் சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக அவர் பேசிய வீடியோவில், ஒரு ரசிகர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதில், விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசித்துப் பார்ப்பேன் என்று அந்த ரசிகர் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார் கோலி.

பின்னர் இதற்கு பதிலளித்த கோலி, என்னைப் பொறுத்தவரை இந்த கருத்தைக் கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வாழலாம். எதற்காக மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு நேசித்துக்கொண்டு இந்தியாவில் அந்த ரசிகர் வாழ வேண்டும்? நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காகக் கவலைப்படவில்லை, அதனால் இப்படிப் பேசவில்லை. மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உங்களுடைய முன்னுரிமை எதுவென்று முடிவு செய்யுங்கள் என்று காட்டமாக கோலி பதிலளித்தார். 

ரசிகரின் கருத்துக்கு கோலி பதிலளித்த விதம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சமூக வலைதளங்களில் கோலிக்கு கண்டனங்கள் குவிந்தன. கோலியின் நிதானமற்ற பதிலடியை பெரும்பாலானோர் ரசிக்கவில்லை. 

இந்நிலையில், இந்த விஷயத்தை கருத்தில்கொண்ட பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு, ஊடகங்களிடம் பேசும்போதும் பொதுவெளியிலும் பணிவுடன் நடந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. பிசிசிஐ-யின் அறிவுறுத்தலுக்கு பிறகாவது கோலி பணிவுடன் நிதானமாக பேசுகிறாரா என்று பார்ப்போம். 

பொதுவாக அணி நிர்வாகத்திலும் இந்திய கிரிக்கெட்டிலும் கோலியின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக பேசப்பட்ட நிலையில், கோலியின் வாயை அடக்குமாறு பிசிசிஐ கண்டித்துள்ளது.