Asianet News TamilAsianet News Tamil

கடுமையாக போராடியும் சிலிச் அதிர்ச்சித் தோல்வி…

cilic fought-hard-to-defeat-the-shock
Author
First Published Jan 5, 2017, 11:55 AM IST


சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவரான குரோஷியாவின் மரின் சிலிச் கடுமையாக போராடியபோதும் அதிர்ச்சித் தோல்விக் கண்டார்.

ஸ்லோவேகியாவைச் சேர்ந்த தகுதிச்சுற்று வீரரான ஜோசப் கோவாலிக் 7-6 (5), 5-7, 7-5 என்ற செட் கணக்கில் உலகின் 6-ஆம் நிலை வீரரான மரின் சிலிச்சை சாய்த்தார்.

போட்டித் தரவரிசை அடிப்படையில் நேரடியாக 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த சிலிச், தனது முதல் ஆட்டத்திலேயே தோற்றதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.

22-ஆவது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் 3-ஆவது நாளான புதன்கிழமை பிரதான கோர்ட்டில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மரின் சிலிச்சும், சர்வதேச தரவரிசையில் 117-ஆவது இடத்தில் இருக்கும் ஜோசப் கோவாலிக்கும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய கோவாலிக், முதல் செட்டின் 2-ஆவது கேமிலேயே சிலிச்சுக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் சிலிச் தனது முதல் சர்வீஸை காப்பாற்ற போராடிய வேண்டியிருந்தது. 5 முறை டியூஸ் வரை சென்ற அந்த கேமை இறுதியில் 3 ஏஸ் சர்வீஸ்களை விளாசி மீட்டார் சிலிச்.

சராசரியாக 200 கி.மீ. வேகத்தில் சர்வீஸ் அடித்த சிலிச், 7-ஆவது கேமில் கோவாலிக் சர்வீஸை முறியடிக்க முயன்றார். ஆனால் அது கடைசியில் தோல்வியில் முடிந்தது.

இளம் வீரரான கோவாலிக் தொடர்ந்து துல்லியமான ஷாட்களை ஆட, 12 கேம்களின் முடிவில் இருவரும் 6-6 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர்.

இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க, டைபிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஆரம்பத்தில் பின்தங்கிய கோவாலிக், பின்னர் அபாரமாக ஆடினார். இதனால் முதல் செட் 7-6 (5) என்ற கணக்கில் அவர் வசமானது. இந்த செட் 58 நிமிடங்கள் நடைபெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டில் ஆக்ரோஷமாக ஆடிய மரின் சிலிச், 2-ஆவது கேமில் கோவாலிக்கின் சர்வீஸை முறியடித்து 2-0 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து அசத்தலாக ஆடிய சிலிச், 6-ஆவது கேமில் மீண்டும் கோவாலிக்கின் சர்வீஸை முறியடிக்கும் வாய்ப்பை நெருங்கினார்.

ஆனால் ஆக்ரோஷமாக போராடிய கோவாலிக், இறுதியில் தனது சர்வீஸை காப்பாற்றினார். அதே ஆக்ரோஷத்தோடு அடுத்த கேமை எதிர்கொண்ட கோவாலிக், அதில் சிலிச்சின் சர்வீஸை முறியடிக்க, 8 கேம்களின் முடிவில் இருவரும் 4-4 என சமநிலையில் இருந்தனர்.

இதன்பிறகு நெருக்கடிக்குள்ளான சிலிச், அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேநேரத்தில் கோவாலிக்கும் அவருக்கு இணையாக ஆட, இந்த செட்டும் டைபிரேக்கருக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 12-ஆவது கேமில் கோவாலிக்கின் சர்வீஸை முறியடித்த சிலிச், அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதையடுத்து நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டின் ஆரம்பம் முதலே சிலிச் ஆக்ரோஷமாக ஆட முயற்சித்தார். ஆனால் கோவாலிக்கும் அசரவில்லை. அவர் 2 மற்றும் 8-ஆவது கேம்களில் சர்வீஸை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டபோதிலும், கடும் போராட்டத்துக்குப் பிறகு தனது சர்வீஸை காப்பாற்றினார்.

11-ஆவது கேமில் 15-30 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்த சிலிச் பதற்றமடைந்தார். அதை சரியாகப் பயன்படுத்தி அந்த கேமை தன்வசமாக்கினார் கோவாலிக். இதனால் அவர் 6-5 என்ற கணக்கில் முன்னிலை பெற, அடுத்த கேமில் கோவாலிக்கின் சர்வீஸை முறியடித்தால் மட்டுமே தோல்வியிலிருந்து தப்ப முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார் சிலிச்.

ஆனால் அவர் கடுமையாகப் போராடியபோதும், அதற்கு பலன் கிடைக்கவில்லை. 3-ஆவது செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றிய கோவாலிக், சிலிச்சை போட்டியிலிருந்து வெளியேற்றினார். இந்த ஆட்டம் 2 மணி, 47 நிமிடங்கள் நடைபெற்றது.

கோவாலிக் தனது காலிறுதியில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவை சந்திக்கிறார். முன்னதாக மெத்வதேவ் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த சீன தைபேவின் யென்-சன் லூவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios