மக்களின் கேள்விகளுக்குன் பதில் அளிக்கும் வகையில் பிசிசிஐ(இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் கொண்டுவந்து மத்திய தகவல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுவரை பிசிசிஐ அமைப்பு, தாங்கள் ஒரு தனியார் அமைப்பு, தங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது, கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்கள் இல்லை என்று கூறிவந்தது. இந்நிலையில், ஆர்டிஐ வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் இனிமேல் அப்படியெல்லாம் கூறி சமாளிக்க முடியாது. 

உச்ச நீதிமன்ற உத்தரவுகள், சட்ட ஆணையத்தின் அறிக்கை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையின் மத்திய தகவல் ஆணையம் ஆகியவை அளித்த அறிக்கை மற்றும் பிசிசிஐ-யின் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆர்டிஐ வரம்புக்குள் பிசிசிஐ அமைப்பைக் கொண்டுவர முகாந்திரம் இருந்ததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கீதா ராணி என்ற மனுதாரர், இந்திய வீரர்களை எதன் அடிப்படையில் பிசிசிஐ தேர்வு செய்கிறது, எந்த வழிகாட்டுதல் முறையில் நெறிமுறை அடிப்படையில் இந்திய தேசத்தின் பிரதிநிதியாக பிசிசிஐ இந்திய அணியை விளையாட வைக்கிறது என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் கீதா ராணிக்கு மனநிறைவான பதிலை அளிக்கவில்லை. 

இதையடுத்து மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டில் ஆய்வு செய்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவுகள், சட்ட ஆணையத்தின் அறிக்கை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையின் மத்திய தகவல் ஆணையம் ஆகியவை அளித்த அறிக்கை, பிசிசிஐயின் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆர்டிஐ வரம்புக்குள் பிசிசிஐ அமைப்பைக் கொண்டுவர முகாந்திரம் இருந்தது. இதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் மற்றும் ஆஃப் லைன் மூலம் மனுக்களைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்க வேண்டும். பிசிசிஐ மட்டுமல்லாது பிசிசிஐ அமைப்பின் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும், உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும்.