பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனைகள் கோவ் லீ (75 கிலோ), சென் ஸியெக்ஸியா (48 கிலோ), லியூ சுன்காங் (69) ஆகியோர் ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அவர்களுடைய பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.

சீன வீராங்கனைகள் மூவருமே 31 முதல் 34 வயதுடையவர்கள். இவர்கள் ஹார்மோன் வளர்ச்சியைத் தூண்டக்கூடிய மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பளுதூக்குதல் விளையாட்டில் ஊக்கமருந்து பயன்படுத்துவது தொடர்ச்சியாக அதிகரித்ததன் எதிரொலியாக, கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம்.

அதன்படி 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் முதல் 2012 இலண்டன் ஒலிம்பிக் வரையிலான காலங்களில் பளுதூக்குதல் வீரர், வீராங்கனைகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

ஒரு நாட்டைச் சேர்ந்த 3 அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தால் அந்த நாட்டுக்கு ஓர் ஆண்டு தடை விதிப்பது என உலக பளுதூக்குதல் சம்மேளனம் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி இப்போது சீனா ஓர் ஆண்டு தடையை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதனால் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும், நவம்பரில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் சீனா பங்கேற்க முடியாது.