Chile overwhelmed the Indian team won the championship

உலக மகளிர் வலைகோல் பந்தாட்டம் லீக் "ரவுண்ட்-2' போட்டியில் இந்திய அணி தனது இறுதிச் சுற்றில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் சிலி அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது.

உலக மகளிர் ஹாக்கி லீக் “ரவுண்ட் – 2” கனடாவின் வான்கோவர் நகரில் நேற்று நடைபெற்றது.

இதன் இறுதிச் சுற்றில் மோதிய இந்தியாவும், சிலியும் தொடக்கம் முதலே அசத்தலாக ஆடின.

5-ஆவது நிமிடத்தில் கோலடித்த சிலி அணி 1-0 என முன்னிலை பெற்றது.
22-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் இந்தியாவின் கோல் வாய்ப்பை சிலி கோல் கீப்பர் கிளாடியா முறியடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் வரையில் இந்தியா சரிவில் இருந்தது.

மூன்றாவது கால் ஆட்டத்தின் 41-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் இந்தியாவின் அனுபா பர்லா கோலடிக்க, இந்தியா வீறு கொண்டு எழுந்தது.

ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருக்க, வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதில் முதல் இரு வாய்ப்புகளில் சிலி வீராங்கனைகள் கோலடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டனர். ஆனால் இந்திய வீராங்கனைகளான ராணி, மோனிகா ஆகியோர் முதல் இரு வாய்ப்புகளில் கோலடித்தனர்.

மூன்றாவது வாய்ப்பில் சிலியின் கரோலினா கார்ஸியா கோலடிக்க, இந்திய தரப்பில் தீபிகா கோலடித்தார். இதனால் 3-1 என்ற கோல் கணக்கில் சிலியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது இந்திய அணி.

இந்தத் தொடரின் சிறந்த கோல் கீப்பராக இந்தியாவின் சவீதா தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் வாகை சூடிய இந்திய அணி, உலக மகளிர் ஹாக்கி லீக்கின் அரையிறுதியில் விளையாடுவதற்கு தகுதிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.