சென்னை,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.

8 அணிகள் இடையிலான 3–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 39–வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி–எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.

கௌகாத்திக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி கண்ட சென்னை அணி அதன்பிறகு நடந்த 5 ஆட்டங்களில் வெற்றியை சுவைக்கவில்லை. 2 ஆட்டத்தில் தோல்வி கண்டது. 3 ஆட்டத்தில் டிரா கண்டது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. ஒருபோதும் இல்லாத வகையில் சென்னை அணி 14 கோல்களை எதிரணிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. வீழ்ச்சியில் இருந்து சென்னை அணி எழுச்சி பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

5–வது இடத்தில் இருக்கும் புனே அணி இந்த சீசனில் வெளியூர் மைதானத்தில் தோல்வியை சந்தித்தது இல்லை. கடைசி 2 லீக் ஆட்டங்களில் மும்பை, கொல்கத்தா அணிகளை புனே அணி வென்ற உற்சாகத்துடன் இன்றைய ஆட்டத்தில் களம் காணும். இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.