Champions Trophy starts today England-Bangladesh clash in first match

இன்று தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து – வங்கதேசம் மோதுகின்றன.

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது.

இதில் நடப்புச் சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் மோதுகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கும் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட், கேப்டன் இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

ஆல்ரவுண்டர் இடத்தில் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, டேவிட் வில்லே போன்றோர் நம்பிக்கையளிக்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ், மார்க் உட், லியாம் பிளங்கெட் போன்றவர்களும், சுழற்பந்து வீச்சில் ஆதில் ரஷித்தும் பலம் சேர்க்கின்றனர். இதுவரை ஐசிசி சார்பில் நடைபெறும் 50 ஓவர் போட்டிகளில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அந்த குறையை இந்த முறை சொந்த மண்ணில் தீர்க்குமா? என்று பார்க்கலாம்.

வங்கதேச அணி சமீபகாலமாக கணிக்க முடியாத வகையில் ஆடி வருகிறது. இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் வங்கதேசம் கடுமையாக போராடினால் வெல்ல வாய்ப்புகள் அதிகம்.