விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
விம்பிள்டன் 2024 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் கடந்த 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் இருவரும் மோதினர். ரோகித் சர்மா, பெப் கார்டியோலா, டேவிட் பெக்காம் போன்ற பல விளையாட்டு பிரபலங்கள் விம்பிள்டனின் கடைசி சில சுற்று போட்டிகளில் ரசிகர்களின் பார்வையில் தென்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் பரபரப்பாக சென்ற இந்த போட்டியின் முதல் செட்டை 6-2 என்று அல்காரஸ் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து 2ஆவது செட்டையும் 6-2 என்று கைப்பற்றினார். அதன் பிறகு ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. 3ஆவது செட்டில் இருவரும் சமமாக விளையாடிய நிலையில் அல்காரஸ் 4-3 என்று முன்னிலை பெற்றார். அதன் பிறகு சுதாரித்திக் கொண்ட ஜோகோவிச் 5-5 என்று ஆட்டத்தையே மாற்றினார். அதன் பிறகு போட்டியானது 6-6 என்று மாறவே டை பிரேக்கருக்கு சென்றது.
மிகவும் பரபரப்பான டை பிரேக்கரில் அல்காரஸ் 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இறுதியாக அல்காரஸ் 6-2, 6-2 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி தொடர்ந்து 2ஆவது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்றிருந்தால் 8ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றிருப்பார். அதோடு 25ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் வென்றிருப்பார். 25ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் வெல்வது என்பது ஒவ்வொருவருக்கும் கனவு.
ஆனால், அந்த கனவை தற்போது ஜோகோவிச் கோட்டைவிட்டுள்ளார். எனினும் அல்காரஸ் தொடர்ந்து 2ஆவது முறையாக விம்பிள்டன் வென்று சாதனை படைத்துள்ளார். சாம்பியனான அல்காரஸிற்கு ரூ.265 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த தொடருக்கு மட்டும் ரூ.500 கோடி பரிசுத் தொகை அறிவித்திருக்கின்றனர். கடந்த ஆண்டும் இதே போன்று தான் இருவரும் இறுதிப் போட்டியில் மோதினர். இந்தப் போட்டியில் அல்காரஸ் முதல் முறையாக விம்பிள்டன் டிராபி கைப்பற்றி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
