விம்பிள்டன் 2025ல் நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்காரஸ் 2வது சுற்றில் எளிதில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
Wimbledon 2025: Carlos Alcaraz Advances To Third Round: உலகப் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கோலாகலமாக நடந்து வருகிறது. வரும் 13ம் தேதி வரை நடக்கும் இந்த டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உள்லிட்ட பலர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறினர். இந்நிலையில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் பிரிட்டிஷ் தகுதிச் சுற்று வீரர் ஆலிவர் டார்வெட்டை எளிதில் வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
கார்லோஸ் அல்காரஸ் 2வது சுற்றில் எளிதில் வெற்றி
கார்லோஸ் அல்காரஸ் தனது முதல் சுற்றில் இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்னினிக்கு எதிராக கடைசி வரை போராடி வெற்றி பெற்றார். கடுமையான வானிலையிலும் அசராமல் போராடிய அல்காரஸ் 7-5, 6-7, 7-5, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்றார். அதே வேளையில் கார்லோஸ் அல்காரஸ் 2வது சுற்று ஆட்டத்தில் ஆலிவர் டார்வெட்டை எளிதில் வீழ்த்தினார். அதாவது அவர் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிக்கனியை பறித்து மூன்றாவது சுற்றுக்கு சென்றுள்ளார்.
தொடர்ச்சியாக 20 வெற்றி
37 வெற்றிகளைப் பெற்ற அல்கராஸ், ஆலிவரின் சர்வை ஆறு முறை முறியடித்து, தனது தொடர்ச்சியான 20வது வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். மூன்றாவது சுற்றில் கார்லோஸ் அல்காரஸ், ஃபெலிக்ஸ் ஆகர் அலியாசிம் அல்லது யான்-லென்னார்ட் ஸ்ட்ரஃப் ஆகியோரில் ஒருவரை எதிர்த்து விளையாடுவார். அல்காரஸ் கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றவர். தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த முறையும் விம்பிள்டன் பட்டத்தை தட்டித் தூக்க அவர் தயாராக உள்ளார்.
ஆலிவர் டார்வெட்டை பாராட்டிய அல்காரஸ்
இந்த போட்டிக்குப் பிறகு கார்லோஸ் அல்காரஸ் ஆலிவர் டார்வெட்டை வெகுவாக பாராட்டினார். ''ஆலிவரைப் பாராட்டியே ஆக வேண்டும். டூரில் அவர் விளையாடிய இரண்டாவது போட்டி இது. அவரது ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் கடினமான சென்டர் கோர்ட்டில் அவர் முதல் போட்டியில் வெளிப்படுத்திய ஆட்டத்திறன் அற்புதம். ஆரம்பத்திலிருந்தே நான் மிகவும் கவனம் செலுத்த வேண்டும், எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இன்று நான் அருமையாக விளையாடினேன். இன்றைய எனது ஆட்டத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்'' என்று தெரிவித்தார்.
30 வெற்றிகளை அதிவேகமாக எட்டிய வீரர்
விம்பிள்டனில் கடந்த 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இரண்டு முறை விம்பிள்டன் சாம்பியனான அல்கராஸ், ஃபோக்னினியை வீழ்த்திய பிறகு, ஓபன் சகாப்தத்தில் புல் தரையில் 30 வெற்றிகளைப் பெற்ற வேகமான வீரர் என்ற பெருமையை கார்லோஸ் அல்காரஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனை அரியனா சபலென்கா, போஸ்கோவாவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு சென்றார். இதேபோல் இங்கிலாந்தின் எம்மா ராடுகானு, முன்னாள் சாம்பியனான வோண்ட்ரூசோவாவை வீழ்த்தினார்.


