உலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

தற்போதைய சூழலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. இரு அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளன. எனவே இரு அணிகளில் ஒரு அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்று பிரயன் லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். 

விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி ஆக்ரோஷமாக ஆடி வெற்றிகளை குவித்து வருகிறது. தொடர் வெற்றிகள் இந்திய அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. எதிரணி எந்த அணியாக இருந்தாலும் அந்த அணியின் மீது இந்திய அணி ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஆரோக்கியமான விஷயம். இந்திய அணியின் ஆதிக்கம், ஒரு அணியாக வீரர்களின் தன்னம்பிக்கையை காட்டுகிறது. 

உலக கோப்பைக்கு முன் இந்திய அணி நல்ல ஃபார்மில் வலுவாக இருப்பது நல்ல விஷயம். பொதுவாகவே பேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி, புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. மேலும் தோனி ஃபார்முக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம். 

இந்திய அணி ரோஹித், தவான், விராட் கோலி என டாப் ஆர்டரை பெருமளவில் சார்ந்திருக்கும் அணியாக பார்க்கப்பட்ட நிலையில், தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது, ராயுடுவின் தன்னம்பிக்கையான பேட்டிங், கேதர் ஜாதவின் பேட்டிங் ஆகியவை இந்திய அணியை அனைத்து வகையிலும் வலுவான  அணியாக மாற்றியுள்ளது. 

என்னதான் வலுவான அணியாக திகழ்ந்தாலும் உலக கோப்பைக்கு முன் ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பின்னர் பேசிய கேப்டன் விராட் கோலி, ஒரு பேட்ஸ்மேன் அவுட்டானதும் புதிதாக களத்திற்கு வரும் பேட்ஸ்மேன், களத்தில் நிலைக்க அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்த நிலையை மாற்றியே தீர வேண்டும். 15-20 ரன்களை கூடுதலாக சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோலி தெரிவித்துள்ளார்.