தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து கேப்டன் கே.எல்.ராகுல் திடீரென வெளியேறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து கேப்டன் கே.எல்.ராகுல் திடீரென வெளியேறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இந்த இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த தொடருக்காக கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய படையை பிசிசிஐ உருவாக்கியிருந்தது. ஐபிஎலில் கலக்கியவர்கள் இதில் இடம்பெற்றிருந்தனர். சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்றது என்ற சாதனையை படைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு பயிற்சியின் போது திடீரென காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் டி20 தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தொடை பகுதியில் பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதே போல குல்தீப் யாதவும் காயம் காரணமாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் கே.எல்.ராகுல் விலகியதால், அடுத்த கேப்டன் யார் என்பதை முடிவு செய்தாக வேண்டும்.

அந்தவகையில் 5 டி20 போட்டிகளுக்கும் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு கோப்பை வென்றுக்கொடுத்த ஹர்திக் பாண்ட்யா துணைக்கேப்டனாக செயல்படவுள்ளார். இந்திய அணி ஏற்கனவே ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் என முன்னணி வீரர்கள் இன்றி களமிறங்குகிறது. இந்த சமயத்தில் ஓப்பனிங் தூணாக இருந்த கேப்டன் கே.எல்.ராகுலும் தற்போது வெளியேறி இருப்பதால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பந்துவீச்சிலும் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது
