Can Arjuna award give to cricketers why not to car racers - Gaurav Kil ...
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இல்லை. ஆனால், கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் அர்ஜூனா விருது கொடுக்கப்படுகிறது. அப்படியெனில் ஏன் கார் பந்தய வீரர்களுக்கு அர்ஜூனா விருது கொடுக்கக் கூடாது என்று இந்திய கார் பந்தய வீரர் கெளரவ் கில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கார் பந்தய வீரர்கள் யாருக்கும் இதுவரையில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டதில்லை. 2015-ல்தான் மோட்டார் பந்தயத்தையே மத்திய விளையாட்டு அமைச்சகம் அங்கீகரித்து உள்ளது. தேசிய விளையாட்டு அமைப்புகளின் பட்டியலிலும் சேர்த்துள்ளது.
இந்த நிலையில் ஆசிய பசிபிக் ரேலி போட்டியில் இரண்டு முறை வாகைச் சூடிய கெளரவ் கில் கூறியது:
“கோல்ஃப், கேரம், ஸ்நூக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு மக்களிடம் பெறிய வரவேற்பு கிடையாது. ஆனால், அந்த விளையாட்டுகளுக்கு எல்லாம் தொடர்ச்சியாக அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.
அப்படியிருக்கையில் மோட்டார் பந்தயம் போன்ற விளையாட்டுகளுக்கு ஏன் அர்ஜுனா விருது வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பினார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் பெரிய அளவில் கார் பந்தயங்கள் நடைபெற்றதில்லை. விருது கமிட்டியினர் எங்களை அங்கீகரித்தால்தான், இந்தியாவில் மோட்டார் பந்தய விளையாட்டு பிரபலமடையும். அப்போதுதான் ஏராளமான இளைஞர்கள் மோட்டார் பந்தயத்தில் பங்கேற்க முன்வருவார்கள்.
ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டி, ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் பதக்கம் வெல்பவர்கள்தான் அர்ஜுனா விருதுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்றால், அதுபோன்ற போட்டிகளில் இடம்பெறாத விளையாட்டுகளைச் சேர்ந்தவர்கள் அர்ஜுனா விருது பெறுவது கடினமாகும்.
அதேநேரத்தில் கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டியில் இல்லை. ஆனால் ஆண்டுதோறும் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.
என்னுடைய விளையாட்டில் நான் இதுவரையில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரையில் எனக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை” என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார்.
