கடைசி ஓவர்களையும் இன்னிங்ஸின் கடைசி கட்டத்திலும் பந்துவீசுவதில் பும்ரா வல்லவர். துல்லியமான யார்க்கர்களால் ஸ்டம்பை பிடுங்கி எறிந்துவிடுவார். 

இந்திய அணி புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரின் வருகைக்கு பிறகு மிகச்சிறந்த பவுலிங் அணியாக திகழ்கிறது. முன்பெல்லாம் பேட்டிங் அணியாக மட்டுமே திகழ்ந்த இந்திய அணி, இப்போதெல்லாம் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் மிரட்டுகிறது. 

புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, உமேஷ், இஷாந்த் என முன்னெப்போதையும் விட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு யூனிட்டை இந்திய அணி பெற்றுள்ளது. நல்ல பேட்டிங், அபாரமான பவுலிங் யூனிட்டுடன் ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி சென்றுள்ளதால், இந்த முறை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெல்வதற்கு வாய்ப்புள்ளது என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

ஆனால் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் வழக்கம்போலவே பின்வரிசை வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தமுடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். 234 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி, எஞ்சிய 4 விக்கெட்டுக்கு 310 ரன்களை வாரி வழங்கியது. ஷமி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், உமேஷ் மற்றும் இஷாந்த் ஆகியோரின் பவுலிங் பெரியளவில் எடுபடவில்லை. இருவரும் ஆளுக்கு 20 ஓவருக்கு மேல் வீசி தலா ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினர். 

புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் பந்துவீசாமல் இருந்தனர். எனினும் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய அணி திணறியதால் பும்ரா களமிறக்கப்பட்டார். 1.1 ஓவர் மட்டுமே வீசி கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். ஜாக்சன் கோல்மேனை அபாரமான யார்க்கரால் கிளீன் போல்டாக்கி அனுப்பினார் பும்ரா. அந்த ஒரு விக்கெட்டே பும்ரா யார் என்பதையும் பும்ரா தொடக்கம் முதல் பந்துவீசியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை பறைசாற்றும்.