ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாட் கம்மின்ஸை பும்ரா வீழ்த்திய பந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆம்புரூஸின் பவுலிங்கை நினைவுபடுத்தியது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் வென்று 2-0 என முன்னிலை வகிக்கும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று 1-1 என தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் களம் கண்டன. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களும் இந்திய அணி 283 ரன்களும் எடுத்தன. 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 287 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறியது. பந்துகள் தாறுமாறாக எகிறின. ஷமி மற்றும் பும்ராவின் பவுன்ஸர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை பதம்பார்த்தன. ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாட் கம்மின்ஸின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். பும்ராவின் பந்தில் கிளீன் போல்டானார் கம்மின்ஸ். அவர் அவுட்டான பந்தை வேறு எந்த பேட்ஸ்மேன் ஆடியிருந்தாலும் அவுட்தான் ஆகியிருப்பார் அப்படியான பந்து அது. ஷார்ட் பிட்சில் பிட்ச் ஆன பந்து, நார்மலான உயரத்தில் எழாமல், மிகவும் அடியில் வேகமாக சென்றது. அந்த பந்து அந்தளவிற்கு கீழே வரும் என்பதை அறியாத கம்மின்ஸ், அதிர்ச்சியடைந்தார். பின்னர் போல்டானதும் அதிர்ச்சியுடனேயே வெளியேறினார். 

இதே பெர்த்தில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் குர்ட்லி ஆம்புரூஸின் பந்து ஒன்று இதே மாதிரி தணிவாக சென்று விக்கெட்டை வீழ்த்தும். பும்ராவின் இந்த பந்து, ஆம்புரூஸின் அந்த பந்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது.