பார்சிலோ அணியில் இருந்த பிரேசிலைச் சேர்ந்த முன்னணி கால்பந்து வீரரான நெய்மரை ரூ.1680 கோடி கொடுத்து பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி வாங்கியுள்ளது.

2021 வரை பார்சிலோனா அணிக்காக விளையாட நெய்மர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் திடீரென பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறியிருப்பதால், அதற்கு ஈடாக ரூ.1680 கோடியை பார்சிலோனா அணிக்கு வழங்கியிருக்கிறது பிரான்ஸைச் சேர்ந்த பிஎஸ்ஜி அணி.

இதன்மூலம் கால்பந்து வரலாற்றில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் நெய்மர்.

முன்னதாக மான்செஸ்டர் யுனைடெட் அணி பால் போக்பாவை ரூ.786 கோடிக்கு வாங்கியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இப்போது நெய்மர் முறியடித்துள்ளார்.

பிரான்ஸின் நடைபெறும் பிரெஞ்சு-1 லீக்கில் விளையாடுவதற்காக நெய்மருடன் ஐந்தாண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளது பிஎஸ்ஜி அணி. இதன்மூலம் அவருக்கு ஆண்டுக்கு ரூ.225 கோடி கிடைக்கும்.

இதுகுறித்து 25 வயதான நெய்மர் கூறியது:

“பிஎஸ்ஜி அணியுடன் இணைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே நான்கு சீசன்கள் ஐரோப்பாவில் விளையாடியிருப்பதால், பிரெஞ்சு-1 லீகில் சவால்களை சந்திக்கத் தயார். நான் பணத்துக்காக அணி மாறிவிட்டதாக ரசிகர்கள் நினைப்பது வருத்தமளிக்கிறது” என்று அவர் கூறினார்.