Brisbane International Tennis Elena Schwidolina of Ukraine progressing to 2nd round
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் ஸ்பெயினின் கார்லா சுவாரெஸ் நவாரோவை எதிர்கொண்டார் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்விடோலினா.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஸ்விடோலினா, அதனை எளிதாக தன் வசப்படுத்தினார். ஆனால், நவாரோ 2-வது செட்டில் மீண்டு ஸ்விடோலினாவுக்கு சவால் அளித்து அதிரடியான ஷாட்களை வீசினார். சற்று
பின்னர், ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந் ஸ்விடோலினா இறுதியில் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஸ்விடோலினா, "போட்டிகளில் பங்கேற்காதபோது மிகக் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். எனவே, எதிர்வரும் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்று, உலகின் முதல் நிலை வீராங்கனையாக உருவெடுக்கும் தகுதி இருப்பதாக உணர்கிறேன். நவாரோ போன்ற பலமான வீராங்கனைகளுக்கு எதிரான வெற்றி, எனது அந்த நம்பிக்கைக்கு ஊக்குவிப்பு அளிக்கின்றன.
சிறந்த ஃபார்முடன் தொடர்ந்து நல்லமுறையில் ஆட்டத்தை விளையாடுவதே எனது நோக்கம். அப்போது கிராண்ட்ஸ்லாமும், தரவரிசை முதலிடமும் எனைத் தேடி வரும்" என்று கூறினார்.
ஸ்விடோலினா தனது 2-வது சுற்றில் குரோஷியாவின் அனா கோஞ்சுவை எதிர்கொள்கிறார்.
