Brazil team came to Mumbai to attend the World Cup football tournament

அடுத்த மாதம் 6–ஆம் தேதி தொடங்கும் 17–வது இளையோர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் பிரேசில் அணி, நாளை நியூசிலாந்துடன் மோதுவதற்காக நேற்று மும்பை வந்தது.

பதினேழு வயதிற்கு உட்பட்டவர்களுக்கான 17-வது இளையோர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கொல்கத்தா, கொச்சி, டெல்லி, மும்பை, கவுகாத்தி, கோவா ஆகிய ஆறு நகரங்களில் நடைபெறும் இதில் 24 அணிகள் பங்கேற்கின்றன. அவை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.

லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடத்தை பெறும் அணிகளில் சிறப்பான நான்கு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

தொடக்க நாளான 6-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள கொலம்பியா - கானா அணிகளும், இந்தியா - அமெரிக்கா அணிகளும், மும்பையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து - துருக்கி அணிகளும், பராகுவே - மாலி அணிகளும் மோதுகின்றன.

இந்த நிலையில் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் பிரேசில் அணி நேற்று காலை மும்பை வந்து சேர்ந்தது. அந்தேரியில் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் பிரேசில் அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது.

இந்தப் போட்டியில் பிரேசில் மூன்று முறை சாம்பியன் வென்றுள்ளது என்பது கொசுறு தகவல்.