ஐபிஎல் 11வது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் பிராவோவின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால், ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பிராவோ, அடுத்தடுத்து சிக்ஸர்களாக விளாசி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். 30 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற பிராவோ பேசுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் இணைந்தபின் நான் விளையாடியதில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இந்தப் போட்டியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். இதுபோன்ற ஒரு சிறப்பான இன்னிங்ஸை இதற்கு முன் நான் விளையாடியதில்லை . இது எனக்கு சிறப்பாக அமைந்துவிட்டது.

நான் களமிறங்கியதில் இருந்து அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே இருந்தது. அதுதான் எனது வேலையாக இருந்தது. என் வேலை முடியாததால், நான் அரை சதம் அடித்தபோதும் கூட பேட்டை உயர்த்தவில்லை. இன்னும் வெற்றிக்கு அதிக தூரம் போக வேண்டும், ஆதலால் பேட்டை உயர்த்துவதைக் காட்டிலும், அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில்தான் ஆர்வமாக இருந்தேன்.

கடைசி ஓவரில் நான் ஆட்டமிழந்தபோது மிகவும் வேதனைப்பட்டேன். அணியின் வெற்றிக்காக இத்தனை நேரம் விளையாடிவிட்டு கடைசி நேரத்தில் ஆட்டமிழக்கிறோமே என்று வருந்தேனேன். ஆனால், வெற்றி கிடைத்தபின் மகிழ்ச்சியை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை.

என்னால் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பான பங்களிப்பைச் செய்ய முடியாவிட்டாலும் கூட, இந்தப் போட்டியில் நான் விளையாடியது மிகச் சிறப்பானதாக இருக்கும் என பிராவோ தெரிவித்தார்.