ஐபிஎல் 11வது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் பிராவோவின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியின்போது, சென்னை மற்றும் மும்பை அணியில் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான பிராவோ மற்றும் பொல்லார்டு ஆகிய இருவரும் 400 என்ற எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடினார்கள். பெரும்பாலான வீரர்கள் இரட்டை இலக்க எண்கள் தான் பயன்படுத்துவர். சிலர் மட்டும் மூன்று இலக்க எண்கள் பயன்படுத்துவர். 

நேற்றைய போட்டியின் போது பொல்லார்டும் பிராவோவும் ஒரே எண் கொண்ட ஜெர்சியை அணிந்திருந்தனர். அதுவும் மூன்று இலக்க எண். 400 என்ற எண் கொண்ட ஜெர்சியை அணிந்திருந்தனர். அவர்கள் இருவரும் ஏன் அப்படி அணிந்திருந்தனர் என்ற கேள்வி எழுந்தது.

போட்டி முடிந்ததும், ஆட்டநாயகன் விருது பெற்ற பிராவோவிடம் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிராவோ, நானும், பொலார்டும் மேற்கிந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் இருவரும் இப்போது வெவ்வேறு அணிக்காக ஆடிக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், இருவருக்கும் டி20 போட்டியில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.

டி20யில் 400 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் பொலார்ட் என்ற பெருமை அவருக்கு இருக்கிறது. அதேபோல ஒட்டுமொத்தமாக அனைத்து நாட்டு லீக், மற்றும் டி20 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரரும் நான்தான்.

இந்த சாதனையை குறிப்பிடவே நாங்கள் இருவரும் 400 எண் அச்சிடப்பட்ட ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும் என்று எங்களுக்குள் பேசி முடிவெடுத்தோம். அதன்படி முதல் போட்டியில் அதுபோல் அணிந்து விளையாடினோம்.

எனக்கும், பொலார்டுக்கும் இந்த சாதனை என்பது மிகப்பெரிய மைல்கல்லாகும். இது தொடர்பாக பொலார்டும் அவரின் அணி நிர்வாகத்தில் பேசினார். நானும் பேசி இந்த முடிவெடுத்தேன் என தெரிவித்தார்.