உலக கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் அதற்காக தீவிரமான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் வலுவாக உள்ளன. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வலுவாக உள்ள நிலையில், உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். அதேநேரத்தில் இந்திய அணியும் வலுவாக உள்ளது. 

இந்த இரண்டு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்பது பலரது கருத்தாக உள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வலுவாக உள்ள இந்திய அணிக்கு 4ம் வரிசை வீரர்தான் பெரும் சிக்கலாக இருந்தது. அந்த பிரச்னைக்கு ராயுடு மூலம் தீர்வு கிடைத்துள்ளதால் இந்திய அணியும் ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். 

நான்காம் வரிசை வீரருக்கான தேடுதல் படலம் நீண்டகாலமாக நடந்துவந்தது. ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ராயுடு என பல வீரர்களை அந்த இடத்தில் இறக்கிவிட்டு சோதிக்கப்பட்டது. ஆனால் ராயுடு மட்டுமே அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நான்காம் வரிசை வீரருக்கான இடத்தை பற்றிக்கொண்டார். ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆடிய ராயுடு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலும் அபாரமாக ஆடி இடத்தை உறுதி செய்துகொண்டார். 

இந்நிலையில், உலக கோப்பை குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, உலக கோப்பையை இந்திய அணிதான் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் ராயுடு குறித்து பேசிய சோப்ரா, 4ம் இடத்திற்கு ஒரு டஜன் வீரர்களை சோதித்த பிறகு தற்போது அந்த இடத்தை ராயுடு பிடித்துவிட்டார். அவருக்கு இங்கிலாந்திற்கு செல்வதற்கு போர்டிங் பாஸ் ரெடியாகிவிட்டது என்றே கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.