ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறமுடியாமல் போனதும் மைதானத்தில் இருந்த சிறுவன் ஒருவன் தேம்பி தேம்பி அழுதான். அவனுடன் புவனேஷ்வர் குமார் போனில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்குகிறது. இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

இத்தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டியது. ஆனால் கடைசி ஒரு ரன்னை நிதானமாக எடுப்பதை விடுத்து தூக்கி அடித்து ஜடேஜா அவுட்டாகியதால், பரபரப்பான போட்டி டிராவில் முடிந்தது. 

ஆஃப்கானிஸ்தானிடம் வெற்றி பெற முடியாததால் மைதானத்தில் இருந்த இந்திய சிறுவன் ஒருவன் தேம்பி தேம்பி அழுதான். அவனை அவனது தந்தை ஆற்றுப்படுத்தினார். இந்த காட்சி தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பட்டது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இதை பார்த்த ஹர்பஜன் சிங், அர்ஜான் என்ற அந்த சிறுவனுக்கு ஆறுதல் கூறும் வகையில், இந்திய அணி இறுதி போட்டியில் வெல்லும் என நம்பிக்கையூட்டினார். 

அவர் மட்டுமல்லாமல் ஆஃப்கானிஸ்தான் வீரர்களான ரஷீத் கான் மற்றும் ஷேஷாத் ஆகிய இருவரும் அந்த சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இவற்றையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு அந்த சிறுவனின் தந்தையை தொடர்புகொண்டு சிறுவனுடன் போனில் பேசினார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். அப்போது, அந்த சிறுவன் புவனேஷ்வர் குமாரிடம் இறுதி போட்டியில் வெற்றி பெற்றுவிடுவீர்கள் என்று கூறுகிறான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.