Asianet News TamilAsianet News Tamil

புரோ கபடி: பெங்கால் வாரியர்ஸை முட்டிச் சாய்த்தது பெங்களூரு புல்ஸ்…

Bengaluru bulls defeated the Bengal Warriors in Pro kabaddi
Bengaluru bulls defeated the Bengal Warriors in Pro kabaddi
Author
First Published Aug 10, 2017, 8:50 AM IST


புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 20-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ் அணி

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 20-வது ஆட்டம் நாகபுரியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் பெங்களூரு கேப்டன் ரோஹித் குமார் தனது ரைடின் முதல் புள்ளியைக் கைப்பற்றினார்.

பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் புள்ளியைப் பெற 3-வது நிமிடம் வரை எடுத்து கொண்டது. அந்த அணியின் மணீந்தர் சிங் தனது ரைடின் முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தார்.

4-வது நிமிடத்தின் முடிவில் பெங்களூரு அணி 5-2 என்ற கணக்கில் முன்னிலை பெற, 10-வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது பெங்கால்.

இதன்பிறகு பெங்கால் ரைடர் குன் லீ அபாரமாக ஆட, அந்த அணி 8-6 என முன்னிலை பெற்றது. இதன்பிறகு இரு அணியும் அபாரமாக ஆட, அசத்தலான டேக்கிள் மூலம் ஸ்கோரை (9-9) சமன் செய்தது பெங்களூரு அணி.

முதல் பாதி ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 12-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஸ்கோரை (12-12) சமன் செய்தது பெங்கால் அணி. 23-வது நிமிடத்தில் பெங்களூரு அணியை ஆல் அவுட்டாவதிலிருந்து காப்பாற்றினார் ஹரீஷ்.

27-வது நிமிடத்தில் இரு அணிகளும் 16-16 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் இருந்தன. 28-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் அஜய் குமார் சூப்பர் ரைடின் மூலம் 4 புள்ளிகளைப் பெற, அதுவே திருப்பு முனையாக அமைந்தது. இதனால் பெங்களூரு அணி 20-14 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.

30-ஆவது நிமிடத்தில் பெங்கால் அணியை ஆல்அவுட்டாக்கிய பெங்களூரு அணி 24-18 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. கடைசிக் கட்டத்தில் பெங்கால் அணி போராடினாலும், புள்ளிகள் வித்தியாசத்தை குறைக்க முடிந்ததேயொழிய தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை.

இறுதியில் பெங்களூரு வாரியர்ஸ் அணி 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.

இதுவரை ஆறு ஆட்டங்களில் விளையாடி 3-வது வெற்றியைப் பெற்றுள்ள பெங்களூரு அணி 19 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதேநேரத்தில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே விளையாடியிருக்கும் பெங்கால் அணிக்கு இது முதல் தோல்வியாகும். அந்த அணி 11 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios