bcci seeks union government stand about india pakistan cricket match
பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடுவது தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான அரசியல் பதற்றத்தால், இரு நாட்டு அணிகளும் கிரிக்கெட் ஆட முடியாத நிலை உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதும் அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதும் வழக்கமாக உள்ளது.
அதனால் இருநாடுகளுக்கும் இடையே சுமூகமற்ற பதற்றமான நிலை உள்ளது. அரசியல் சுமூகமற்ற நிலை, கிரிக்கெட்டிலும் எதிரொலிக்கிறது. கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. இந்திய அரசின் அனுமதி இல்லாமல் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆட முடியாது என ஏற்கனவே பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், 2014ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, இந்திய அணி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடாததால், கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் 70 மில்லியன் அமெரிக்கன் டாலரை இழப்பீடாக இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என கோரியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் முறையிட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணை அக்டோபர் முதல் வாரத்தில் நடக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடுவது குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு பிசிசிஐ சார்பில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மத்திய அரசு கூறும் பதிலை பொறுத்து ஐசிசி விசாரணையின்போது, பிசிசிஐ கருத்துகளை முன்வைக்கும்.
