bcci planning to change ipl match timing and ipl teams against that

11வது ஐபிஎல் சீசன் வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இதற்கான அணிகளின் ஏலம் முடிந்துவிட்டது. சூதாட்ட புகார் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடாமல் இருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை மீண்டும் களம் காண்கிறது.

இதனால் சென்னை அணியின் ரசிகர்களும் ஐபிஎல் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த ஐபிஎல்லை எதிர்நோக்குகின்றனர். இதுவரை ஐபிஎல் போட்டிகளை சோனி சிக்ஸ் சேனல் ஒளிபரப்பிவந்தது. 

இந்த முறை ஐபிஎல் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் வாங்கியுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை நடத்தும் நேரங்களில் சில மாற்றங்களை செய்யுமாறு பிசிசிஐயிடம் ஸ்டார் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, மாலை 4 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கும் இரவு 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கும் தொடங்குமாறும் பரிந்துரைத்துள்ளது. இதை ஏற்ற பிசிசிஐ, ஐபிஎல் அணிகளின் ஆலோசனைகளை கேட்டது. அப்போது, அனைத்து அணிகளும் ஒற்றுமையாக அந்த பரிந்துரையை நிராகரித்துள்ளன.

ஒரு போட்டி நடக்கும் நாளில் பரவாயில்லை. ஆனால் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடக்கும் சமயத்தில் இந்த டைமிங் சாத்தியமில்லை என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளின் நேரம் மாற்றுவது குறித்த எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனினும் இதுதொடர்பான இறுதி முடிவை ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தான் எடுப்பார். விரைவில் இதுதொடர்பான முடிவு தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.