புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா - பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசல் அதிகரித்துள்ளது. 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்த இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையாமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

இந்த தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் அணியுடன் உலக கோப்பையில் இந்திய அணி ஆடக்கூடாது என்ற வலியுறுத்தல்களும், பாகிஸ்தானை உலக கோப்பையில் ஆட ஐசிசி தடை விதிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் வலுத்தன. ஆனால் இவையெல்லாம் சாத்தியமில்லை என்பதே உண்மை. 

எனினும் பாகிஸ்தானுக்கு தூதரக ரீதியிலான நெருக்கடியை கொடுத்துவருகிறது இந்தியா. மேலும் புல்வாமா தாக்குதலுக்கு இன்று இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்துள்ளனர். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. 

இதற்கிடையே, ஐபிஎல்லில் ஆடும் வெளிநாட்டு வீரர்கள் பலர் பாகிஸ்தானில் நடத்தப்பட்டும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும் ஆடிவருகின்றனர். டுவைன் பிராவோ, டிவில்லியர்ஸ், சுனில் நரைன் உள்ளிட்ட பல வீரர்கள் ஐபிஎல்லிலும் பி.எஸ்.எல்லிலும் ஆடிவருகின்றனர். 

இந்நிலையில், ஐபிஎல் மற்றும் பி.எஸ்.எல் ஆகிய இரண்டு தொடர்களிலும் ஆடும் வெளிநாட்டு வீரர்கள், ஐபிஎல்லா? பி.எஸ்.எல்லா? என்று முடிவெடுக்குமாறு எச்சரிக்கை விடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு நேற்று நடத்திய ஆலோசனையில் இதுகுறித்து விவாதித்ததாகவும் இதுகுறித்து அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் தெரிகிறது. பி.எஸ்.எல்லில் ஆடினால் ஐபிஎல்லில் ஆடமுடியாது என்றும் அதனால் இரண்டு தொடர்களில் எது என்று வெளிநாட்டு வீரர்கள் முடிவெடுக்குமாறு பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.