இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகிப்பதற்கு முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு பிசிசிஐக்கு முறைப்படி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை வினோத் ராய் தலைமையிலான குழுவே பிசிசிஐயை நிர்வகிக்கும்.
இந்தக் குழுவில் வினோத் ராய் தவிர, வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா, ஐடிஎஃப்சி (உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம்) நிர்வாக இயக்குநர் விக்ரம் லிமாயே, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோல் பிப்ரவரி 2 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்கு கிரிக்கெட் நிர்வாகிகளான அமிதாப் செளத்ரி, அனிருத் செளத்ரி மற்றும் லிமாயே ஆகியோரை நியமித்து நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வினோத் ராய் 2008 ஜனவரி முதல் 2013 மே வரை மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக இருந்தார். இவர்தான், 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை கணக்கீடு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐயில் நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள வினோத் ராய் தெரிவித்ததாவது:
“நான் கிரிக்கெட்டின் உண்மையான ரசிகன். இப்போது பிசிசிஐயில் எனக்கு வழங்கப்பட்டுள்ள பணி "நைட் வாட்ச்மேன்' ஆகும். நல்ல நிர்வாகம், நல்ல அமைப்பு, சரியான கட்டமைப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி பிசிசிஐக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான சுமுக நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்' என்றுத் தெரிவித்தார்.
டெஸ்ட் போட்டியில் அந்த நாள் ஆட்டம் முடியும் தருவாயில் விக்கெட் விழுந்தால், முன்னணி பேட்ஸ்மேன்களை பாதுகாக்கும் வகையில் தாற்காலிக நடவடிக்கையாக பின்வரிசை பேட்ஸ்மேன்களை களமிறக்குவார்கள். அந்த வீரரை "நைட் வாட்ச்மேன்' என்பார்கள்.
