ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி, அடுத்ததாக இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது. முதலில் டி20 தொடர் நடக்க உள்ளது. முதல் போட்டி வரும் 24ம் தேதியும் இரண்டாவது டி20 போட்டி வரும் 27ம் தேதியும் நடக்க உள்ளது. அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை நடக்க உள்ளது. 

இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இதுதான் என்பதால், உலக கோப்பையை மனதில் வைத்து உலக கோப்பைக்கான பரிசீலனையில் உள்ள வீரர்கள் இத்தொடரில் பரிசோதிக்கப்பட உள்ளார்கள். ஆஸ்திரேலிய தொடருக்கான அணி தேர்வு குறித்து விவாதித்த தேர்வுக்குழு டி20 அணியை அறிவித்துள்ளது. 

இந்த அணியில் கலீல் அகமது நீக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணியில் ஆடி கவனத்தை ஈர்த்த சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் குல்தீப் யாதவிற்கு ஓய்வளித்துவிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் ரிஸ்ட் ஸ்பின்னரான மயன்க் மார்கண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

காஃபி வித் கரன் சர்ச்சையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்ட கேஎல் ராகுல் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டி20 அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, விஜய் சங்கர், சாஹல், பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மயன்க் மார்கண்டே.