BCCI agree to cricket players salary hike
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக பிசிசிஐயுடன் இந்திய அணி சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.
இந்திய அணி வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என இந்திய கேப்டன் கோலி, பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதுதொடர்பாக இன்று நடந்த பேச்சுவார்த்தையில் இந்திய அணி சார்பில் கேப்டன் கோலி, தோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரும் பிசிசிஐ சார்பில் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், உறுப்பினர் டயானா எடுல்ஜி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதல்தர வீரர்களுக்கான ஊதியத்தை ரூ.5 கோடியாக அதிகரிக்குமாறு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அத்துடன், போட்டிகளுக்கு இடையேயான இடைவெளி, வீரர்களுக்கான ஓய்வு ஆகியவை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பிலான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால், ஊதிய உயர்வின் விகிதம் குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்த பிறகே தெரிவிக்கப்படும் என வினோத் ராய் தெரிவித்துவிட்டார்.
தற்போதைய நடைமுறையின்படி, தோனி, கோலி ஆகிய முதல் தர வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடியும், 2-ஆம் தர வீரர்களுக்கு ரூ.1 கோடியும், 3-ஆம் தர வீரர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் இருக்கும் வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது. இதுவே ஒருநாள் போட்டியின்போது ரூ.6 லட்சமும், டி20 போட்டியின்போது ரூ.3 லட்சமும் ஊதியமாக வழங்கப்படுகிறது. பிளேயிங் லெவனில் இல்லாத வீரர்களுக்கு மேற்குறிப்பிட்ட ஊதியத்தில் பாதியளவு வழங்கப்படுகிறது.
