டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணி வலுவான அணியாக திகழ்கிறது. மூன்று விதமான போட்டிகளிலும் அந்நிய மண்ணிலும் எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது இந்திய அணி. அண்மைக்காலமாக இந்திய அணி வெற்றிகளை குவித்துவருவதில் பவுலர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. 

பேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோரின் வருகைக்கு பிறகு மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. வேகப்பந்து வீச்சில் பும்ராவும் ஸ்பின் பவுலிங்கில் குல்தீப் - சாஹல் ஜோடியும் மிரட்டலாக பந்துவீசிவருகிறது. 

அதிலும் குறிப்பாக குல்தீப்பின் பவுலிங் அபாரம். குல்தீப்பின் கையசைவுகளை கணிக்க முடியாததால் எதிரணி பேட்ஸ்மேன்கள் குல்தீப்பிடம் சரணடைந்துவிடுகின்றனர். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என உலகின் பல சிறந்த பேட்டிங் வரிசைகளை சிதைத்து இந்திய அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். 

உலக கோப்பையில் இந்திய அணியின் மாபெரும் சக்தியாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு குல்தீப் யாதவ் அளித்த பேட்டியில், பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணமோ உத்தியோ அல்ல. பேட்ஸ்மேன்கள் என் பந்தில் சிக்ஸர் அடித்தால் மகிழ்ச்சியடைவேன், ஏனெனில் அவர்கள் சிக்ஸர் அடித்தால் எனக்கு விக்கெட் வீழ்த்த வாய்ப்பு கிடைக்கும். பேட்ஸ்மேன்களை போக்கு காட்டி விக்கெட் வீழ்த்துவதே எனது பலம். அதன்படியே எப்போதும் செயல்படுவேன் என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.