Batsman Kohli continues to top the ICC rankings
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இடம்பெற்றுள்ளார்.
ஐசிசி தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கோலி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், மூன்றாம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ், நான்காம் இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட், ஐந்தாம் இடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை - ஜிம்பாப்வே இடையிலான தொடரை அடுத்து, இலங்கை பேட்ஸ்மேன் நிரோஷன் திக்வெல்லா ஏழு இடங்கள் முன்னேறி 38-வது இடத்துக்கு வந்துள்ளார்.
ஜிம்பாப்வேயின் சிகந்தர் ராஸா மூன்று இடங்கள் முன்னேறி 51-வது இடத்துக்கும், ஹாமிஸ்டன் மஸாகட்ஸா 14 இடங்கள் ஏற்றம் கண்டு 57-வது இடத்துக்கும் வந்துள்ளனர்.
இலங்கையின் உபுல் தரங்கா 10 இடங்கள் முன்னேறி 64-வது இடத்துக்கும், தனுஷ்கா குணதிலகா 36 இடங்கள் முன்னேறி 70-வது இடத்துக்கும் வந்துள்ளனர்.
அதேபோன்று, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் மொத்தமாக 154 ஓட்டங்கள் எடுத்த தோனி, மூன்று இடங்கள் முன்னேறி 12-வது இடத்துக்கு வந்துள்ளார்.
அதே தொடரில் 336 ஓட்டங்கள் குவித்த அஜிங்க்ய ரஹானே 13 இடங்கள் முன்னேறி 23- வது இடத்துக்கு வந்துள்ளார். இது, அவரது தரவரிசை வரலாற்றில் உச்சபட்ச இடம்.
அந்தத் தொடரில் சிறப்பாக ஆடிய மேற்கிந்தியத் தீவுகளின் ஷாய் ஹோப் 20 இடங்கள் ஏற்றம் கண்டு 61-வது இடத்துக்கு வந்துள்ளார்.
ஐசிசியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்தியர்கள் எவரும் இல்லை.
