ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா – ரியல் மாட்ரிட் மோதிய ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்த்தபோது மெஸ்ஸி அடித்த கோலால் 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது பார்சிலோனா.

ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டி பார்சிலோனா – ரியல் மாட்ரிட் மோதிய ஆட்டம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடின. 28-ஆவது நிமிடத்தில் மாட்ரிட் வீரர் கேஸ்மிரோ கோலடிக்க, அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால், அடுத்த 5-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸியின் கோல் மாட்ரிட்டின் முன்னிலையை தகர்த்தது.

முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 73-ஆவது நிமிடத்தில் ராகிடிச் கோலடிக்க, பார்சிலோனா 2-1 என முன்னிலைப் பெற்றது. ஆனால், மாட்ரிட் வீரர் ரோட்ரிகஸ் கோலடிக்க, இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் மீண்டும் சமநிலைப் பெற்றன.

மெஸ்ஸி மீது அபாயகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மாட்ரிட் கேப்டன் செர்ஜிகோ ரேமோஸுக்கு நடுவர் ரெட் கார்டு காண்பித்தார். இதையடுத்து அவர் வெளியேற, அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இதை பயன்படுத்திக் கொண்ட பார்சிலோனா வீரர் மெஸ்ஸி, 'இஞ்சுரி' நேரத்தில் (90+2) கோலடிக்க, அந்த அணி 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் இரு கோல்களை அடித்ததன் மூலம் பார்சிலோனா கிளப்புக்காக 500 கோல்களை அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றார் மெஸ்ஸி.