14வது ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. மாலை 5 மணிக்கு துபாயில் போட்டி தொடங்குகிறது. 

7வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் வங்கதேச அணியும் களம் காண்கின்றன. கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியிலும் இந்தியாவும் வங்கதேசமும் தான் மோதின. அப்போது வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. 

அதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்த முறை இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வெல்வதில் வங்கதேசம் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் இந்திய அணியும் வலுவாக உள்ளது. ரோஹித், தவான், ராயுடு ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரும் அசத்தலாக பந்துவீசி வருகின்றனர். ஜடேஜா, கேதர் ஜாதவ் ஆகிய ஆல்ரவுண்டர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குல்தீப் யாதவ் சுழலில் அவ்வப்போது பிரேக் கொடுக்கிறார். 

அதேபோல வங்கதேச அணியும் இந்தியாவை வீழ்த்த “6M" திட்டத்தை வைத்துள்ளது. ஆசிய கோப்பை தொடரில் இறுதி போட்டிவரை அந்த அணி முன்னேறியதற்கு காரணம் சில வீரர்கள் தான். அந்த அணியின் கேப்டன் மஷ்ரஃபே மோர்டசா, முஷ்ஃபிகுர் ரஹீம், முஸ்தாபிசுர், மஹ்மதுல்லா, மெஹிடி ஹாசன் மிராஸ், முகமது மிதுன் ஆகிய 6 பேரும்தான் ஒவ்வொரு வகையில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து அந்த அணியை இறுதி போட்டிவரை அழைத்து சென்றுள்ளனர். 

முஷ்ஃபிகுர் ரஹீம் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இந்த தொடரில் இதுவரை ஒரு சதம் உட்பட 297 ரன்களை குவித்துள்ளார். பாகிஸ்தானிடம் 99 ரன்களில் அவுட்டாகிவிட்டார். இல்லையென்றால் அவரது கணக்கில் இரண்டு சதங்கள் ஆகியிருக்கும். 

அதேபோல அந்த அணியின் கேப்டன் மோர்டசா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டுவருகிறார். முஸ்தாபிசுர் அருமையாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்துவருகிறார். ஏற்கனவே ரோஹித்துக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த முஸ்தாபிசுரின் பவுலிங்கை, சூப்பர் 4 சுற்றில் நேர்த்தியாக எதிர்கொண்டு ஆடினார் ரோஹித் சர்மா. எனினும் முஸ்தாபிசுர் நெருக்கடி கொடுக்கக்கூடும்.

அதேபோல இக்கட்டான நிலைகளில் எல்லாம் முஷ்ஃபிகுர் ரஹீம், மிதுன் அல்லது மஹ்மதுல்லா ஆகிய மூவரில் இருவர் கைகொடுத்து அந்த அணியை மீட்டெடுத்து விடுகின்றனர். அதேபோல மெஹிடியும் இந்த தொடரில் சிறப்பாக ஆடிவருகிறார். எனவே இவர்கள் 6 பேரும் தான் வங்கதேச அணியின் முக்கியமான வீரர்கள். இவர்களை வைத்து இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில்தான் வங்கதேசம் உள்ளது. அவர்களின் திட்டத்தை தகர்த்து எறிவார்களா இந்திய வீரர்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.