ஆசிய கோப்பை இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடிவருகிறார். 33 பந்துகளுக்கே அரைசதம் கடந்து ஆடிவருகிறார். 

ஆசிய கோப்பை இறுதி போட்டி துபாயில் நடந்துவருகிறது. மாலை 5 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங் வீச விரும்பியதால் வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸும் மெஹிடியும் களமிறங்கினர். புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவின் பவுலிங்கை இருவருமே மிக கவனமாக எதிர்கொண்டனர். சில ஓவர்கள் களத்தில் நிலைத்து நின்ற பிறகு லிட்டன் தாஸ் அதிரடியாக ஆட தொடங்கினார். பும்ரா மற்றும் சாஹல் ஆகிய இருவரின் ஓவர்களையும் அடித்து ஆடினார். 

அதிரடியாக ஆடிய லிட்டன் தாஸ், 33 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த தொடரில் எந்த போட்டியிலும் சரியாக ஆடாத வங்கதேச அணியின் தொடக்க ஜோடி, இந்த போட்டியில் சிறப்பாக ஆடிவருகிறது. 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசிய லிட்டன் தாஸ் தொடர்ந்து அதிரடியாக ஆடிவருகிறார். 

அரைசதம் கடந்ததும் ஜடேஜா வீசிய 12வது ஓவரின் 3வது பந்தை தாஸ் தூக்கி அடிக்க, சாஹல் அந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து லிட்டன் தாஸும் மெஹிடியும் தொடர்ந்து ஆடிவருகின்றனர். 

15 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்து வங்கதேச அணி ஆடிவருகிறது. முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறிவருகின்றனர்.