சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு வங்கதேசம் அணி தகுதி பெற்றுள்ளது. இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் நாளை மோதுகின்றன.

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் கடைசி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்திய அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இந்திய அணியுடன் இறுதி போட்டியில் மோதப்போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் பாகிஸ்தானும் வங்கதேசமும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ், சவுமியா சர்கார், மோமினுல் ஹாக் ஆகிய மூவரும் 12 ரன்களுக்கே ஆட்டமிழந்தனர். அதன்பிறகு முஷ்ஃபிகுர் ரஹீம் - மிதுன் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 144 ரன்களை சேர்த்தது. இருவருமே அரைசதம் கடந்தனர். மிதுன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அதன்பிறகும் சிறப்பாக ஆடிவந்த முஷ்ஃபிகுர் ரஹீம் சதத்திற்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், அதை எடுக்க முடியாமல் 99 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு அந்த அணியின் விக்கெட்டுகள் சரிய 48.5 ஓவரில் 239 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது.

240 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஃபகார் ஜமான் மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் 3 ரன்களுக்கே இழந்துவிட்டது. அதன்பிறகு சர்ஃப்ராஸ் கானும் 10 ரன்களில் வெளியேறினார். சற்று நேரம் களத்தில் நின்று இமாம் உல் ஹக்குடன் ஷோயப் மாலிக் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. மாலிக்கும் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு விக்கெட்டுகள் சரிந்தன. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் இமாம் உல் ஹக் பொறுப்புடன் ஆடி பாகிஸ்தான் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.

ஆனால் அவர் 83 ரன்களில் ஆட்டமிழக்க அதன்பிறகு அந்த அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணியின் ஷாஹீன் அஃப்ரிடியும் ஜூனைத் கானும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆனால் அந்த அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. 50 ஓவர் முடிவில் 202 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் அணி எடுத்தது. இதையடுத்து வங்கதேச அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இறுதி போட்டியில் இந்திய அணியும் வங்கதேச அணியும் நாளை மோதுகின்றன.