11 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தால் வீழ்த்தப்பட்டது.

இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் வெற்றியைப் பெற்றுள்ளது வங்கதேசம் என்ற வரலாற்றைப் பதிவு செய்தது வங்கதேசம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 78.5 ஓவர்களில் 260 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல்ஹசன் 84 ஓட்டங்கள், தமிம் இக்பால் 71 ஓட்டங்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியத் தரப்பில் பட் கம்மின்ஸ், நாதன் லயன், ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 74.5 ஓவர்களில் 217 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அந்த அணியில் மட் ரென்ஷா 45 ஓட்டங்கள், ஆஷ்டன் அகர் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்கள் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 5 விக்கெட்டுகளையும், ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 43 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் 79.3 ஓவர்களில் 221 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக தமிம் இக்பால் 78 ஓட்டங்கள், கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 41 ஓட்டங்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

டேவிட் வார்னர் 75 ஓட்டங்கள், ஸ்டீவன் ஸ்மித் 25 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர். 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 121 பந்துகளில் சதமடித்தார்.

ஆஸ்திரேலியா 41.5 ஓவர்களில் 158 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார். அவர் 135 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்கள் குவித்து அல்ஹசன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 

பின்னர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் 37 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 15 ஓட்டங்கள், மேத்யூ வேட் 4 ஓட்டங்கள், ஆஷ்டன் அகர் 2 ஓட்டங்கள், மேக்ஸ்வெல் 14 ஓட்டங்களில் நடையைக் கட்டினர்.

அப்போது 57.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா.  இதையடுத்து நாதன் லயன் களமிறங்க, மறுமுனையில் பேட் கம்மின்ஸ் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விரட்டி மிரட்டினார்.

ஆஸ்திரேலியா அணி 66.2 ஓவர்களில் 228 ஓட்டங்களை எட்டியபோது நாதன் லயன் 12 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜோஷ் ஹேஸில்வுட்டை டக் அவுட்டாக்கினார் தைஜுல் இஸ்லாம். இதனால் ஆஸ்திரேலியா 70.5 ஓவர்களில் 244 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பேட் கம்மின்ஸ் 55 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 5 விக்கெட்டுகளையும், தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், ஹசன் மிராஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இரு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி சிட்டகாங் நகரில் தொடங்குகிறது.