நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 136 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 542 ஓட்டங்கள் குவித்தது.

வங்கதேச வீரர் ஷகிப் அல்ஹசன் 217 ஓட்டங்களும், கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 159 ஓட்டங்களும் குவித்தனர்.

நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் வங்கதேச அணி 40.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் மோமினுல் ஹக் முந்தைய நாள் ஸ்கோருடன் மேலும் 2 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் 64 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஷகிப் அல்ஹசனுடன் இணைந்தார் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம். இந்த ஜோடி அசத்தலாக ஆட, மதிய உணவு இடைவேளையின்போது 75 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 269 ஓட்டங்கள் எடுத்திருந்தது வங்கதேசம்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஷகிப் அல்ஹசன் டிரிங்க்ஸ் இடைவேளைக்குப் பிறகு 150 பந்துகளில் சதமடித்தார்.

அவரைத் தொடர்ந்து கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், தேநீர் இடைவேளைக்கு முன்னதாக 179 பந்துகளில் சதமடித்தார்.

இதனால் 103-ஆவது ஓவரில் 400 ஓட்டங்களை எட்டியது வங்கதேசம்.

பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய ஷகிப் அல்ஹசன் 191 பந்துகளில் 150 ஓட்டங்களைக் கடக்க, முஷ்பிகுர் ரஹிம் 240 பந்துகளில் 150 ஓட்டங்களை எட்டினார். இதனால் 123-ஆவது ஓவரில் 500 ஓட்டங்களை எட்டியது வங்கதேசம்.

தொடர்ந்து அசத்தலாக ஆடிய அல்ஹசன் 253 பந்துகளில் இரட்டைச் சதமடித்தார்.

5-ஆவது விக்கெட்டுக்கு 359: வங்கதேச அணி 519 ஓட்டங்களை எட்டியபோது போல்ட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் ஆனார் ரஹிம். 260 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 23 பவுண்டரிகளுடன் 159 ஓட்டங்கள் குவித்தார்.

ரஹிம்-அல்ஹசன் ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 359 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து சபீர் ரஹ்மான் களமிறங்க, அல்ஹசன் 276 பந்துகளில் 31 பவுண்டரிகளுடன் 217 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த ஹசன் மிராஸ் டக் அவுட்டாக, 2-ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வங்கதேச அணி 136 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 542 ஓட்டங்கள் குவித்துள்ளது. சபீர் ரஹ்மான் 10 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

நியூஸிலாந்து தரப்பில் நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட், டிம் செளதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனர்.

இந்தப் போட்டியில் ஷகிப் அல்ஹசன்-முஷ்பிகுர் ரஹிம் ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 359 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் ஒரு விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்த வங்கதேச ஜோடி என்ற பெருமையைப் பெற்றது.