வளைகோற் பந்தாட்ட போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வேலூர் அணியை வீழ்த்தியது மதுரை அணி.

டி.எஸ்.இராசமாணிக்கம் நினைவு இரண்டாவது மாநில அளவிலான ஆண்கள் வளைகோற் பந்தாட்ட போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் அரங்கத்தில் நேற்றுத் தொடங்கியது.

வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.இராசமாணிக்கம் நினைவு 2-வது மாநில அளவிலான ஆண்கள் வலைகோற் பந்தாட்ட போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் அரங்கத்தில் நேற்று தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமான வரி, ஏ.ஜி.அலுவலகம் உள்பட 18 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் ஜி.கே. மோட்டார்ஸ் அணி (மதுரை) அணி 4-1 என்ற கோல் கணக்கில் வேலூர் அணியைத் தோற்கடித்தது.

மதுரை அணியில் மோகன் 38-வது நிமிடத்திலும், அஜய் 43-வது நிமிடத்திலும், ராஜசேகர் 47-வது நிமிடத்திலும், பாது 52-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

வேலூர் அணியில் அஜித் 28-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) அணி 4-1 என்ற கோல் கணக்கில் விருதுநகர் அணியை வீழ்த்தியது.

ஐ.ஓ.பி. அணியில் முத்துசெல்வன், வினோத்ராயர், ஹர்மன்பிரீத்சிங், அமன்தீப் எக்கா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். விருதுநகர் அணி தரப்பில் நிரஞ்சன் ஒரு கோல் திருப்பினார்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் திருநகர் கிளப் (மதுரை)-வேலூர் அணியும் (பிற்பகல் 2 மணி), தமிழ்நாடு போலீஸ் - வெஸ்லி கிளப் (பிற்பகல் 3.30 மணி) அணியும் மோதுகின்றன.