நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது. 

சொந்த மண்ணில் எளிதாக 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் வழக்கமுடைய நியூசிலாந்து அணியை இரண்டு போட்டிகளிலுமே இந்திய பவுலர்கள் சுருட்டிவிட்டனர். இதன் பெரும்பாலான கிரெடிட் குல்தீப் - சாஹல் சுழல் ஜோடியைத்தான் சேரும். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 39 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ், இரண்டாவது போட்டியில் 45 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் குல்தீப். இரண்டு போட்டிகளிலும் குல்தீப் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்த, சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு போட்டியில் 6 விக்கெட்டுகள் வீதம் இருவரும் இணைந்து இரண்டு போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக ஸ்பின் பவுலிங்தான் உள்ளது. பொதுவாகவே பேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோரின் வருகையால் தற்போது மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. 

அஷ்வின் - ஜடேஜா சுழல் ஜோடியின் இடத்தை பூர்த்தி செய்துள்ள குல்தீப் - சாஹல் சுழல் ஜோடி சர்வதேச அளவில் அனைத்து அணிகளுக்கும் சவாலாக திகழ்ந்துள்ளது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அசத்திய இந்த ஜோடி, நியூசிலாந்திலும் அருமையாக வீசிவருகிறது. 

குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவருமே சிறப்பாக வீசினாலும் இருவரில் குல்தீப் யாதவின் பவிலிங் அபாரமானது. அவரது பந்தையும் கையசைவுகளையும் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாதது அவரது மிகப்பெரிய பலம். சாஹலும் நல்ல வேரியேஷனில் வீசுவதால் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாமல் எதிரணி பேட்ஸ்மேன்கள் இவர்களிடம் திணறுகின்றனர். 

இந்நிலையில், இந்த தொடர் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், இந்திய அணியின் மற்றுமொரு அபாரமான ஆட்டம், குறிப்பாக ஸ்பின்னர்ஸ் மிரட்டிவிட்டனர். நியூசிலாந்து அணியின் பிரேஸ்வெல் இரண்டாவது போட்டியில் அருமையாக பேட்டிங் ஆடினார். பிரேஸ்வெல் அவரது இயல்பான ஆட்டத்தை ஆடினார். அதேபோலவே அந்த அணியின் மற்ற பேட்ஸ்மேன்களும் ஆட வேண்டும். குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோரின் பவுலிங்கை கணிக்காதவரை, இந்திய அணியை வீழ்த்துவது கடினம். ஆஃப் ஸ்பின்னர்களை எளிதாக ஆடிவிடலாம். ஆனால் ரிஸ்ட் ஸ்பின்னர்களை ஆடுவது கடினம் என்று அசாருதீன் தெரிவித்துள்ளார்.