Australian Open Badminton Indian players in the second round
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், சமீர் வர்மா உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் 2-வது சுற்றுக்கு அசத்தலாக முன்னேறினர்.
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சாய் பிரணீத் மற்றும் இஸ்ரேலின் மிஷா ஜிஸ்பர்மேன் மோதினர்.
இதில், 21-17, 21-14 என்ற நேர் செட்களில் மிஷா ஜிஸ்பர்மேனை வீழ்த்தினார் சாய் பிரணீத். 2-வது சுற்றில் சாய் பிரணீத் - இந்தோனேஷியாவின் பான்ஜி அகமது மெளலானாவை எதிர்கொள்கிறார்
மற்றொரு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் சமீர் வர்மா 13-21, 21-17, 21-12 என்ற செட்களில் நியூஸிலாந்தின் அபினவ் மனோடாவை வீழ்த்தினார். 2-வது சுற்றில் சமீர் வர்மா - ஜப்பானின் டகுமா யுடாவையும் சந்திக்கின்றார்.
மகளிர் பிரிவில் இந்தியாவின் ஜக்கா வைஷ்ணவி ரெட்டி 19-21, 21-15, 21-15 என்ற செட்களில் இங்கிலாந்தின் ஜியார்ஜினா பிளான்டை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை தனது முதல் சுற்றில் 21-11, 21-10 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் லுகாஸ் டெஃபோல்கி/மிக்கெல் ஃபாரிமான் இணையை வீழ்த்தியது.
மற்றொரு இந்திய ஜோடியான அர்ஜூன் - ராமச்சந்திரன் 21-7, 21-15 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ரேமன்ட் டாம் - எரிக் வோங் ஜோடியை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மேகனா ஜகம்புடி - பூர்விஷா ராம் இணை முதல் சுற்றில் 21-10, 21-16 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் மேகி சான் - ஜோடீ வேகா இணையை வென்றது.
