ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னருக்கு அடுத்தபடியாக பயிற்சியாளர் டேரன் லீமெனும் பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், அதற்கு உடந்தையாக இருந்த கேப்டன் ஸ்மித், ஐடியா கொடுத்த துணை கேப்டன் வார்னர் ஆகியோர் அவரவர் வகித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஏற்கனவே களத்தில் ஆஸ்திரேலிய வீரர்களின் செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மீதான நம்பகத்தன்மை மீதே கேள்விகளை எழுப்புகின்ற வகையில் இந்த சர்ச்சை உள்ளதால், ஸ்மித் மற்றும் வார்னருக்கு வாழ்நாள் தடை விதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது, ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடுமையான சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கக்கூடிய பயிற்சியாளர் டேரன் லீமெனும் பதவி விலக வாய்ப்புள்ளது.

அணியினரை தவறாக வழிநடத்துவதாக லீமென் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களே லீமெனை குற்றம்சாட்டினர். 

இந்நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் சதர்லேண்ட், தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். அங்கு அணியின் வீரர்களையும் பயிற்சியாளர் லீமெனையும் சந்திக்க உள்ளார். லீமென் பதவி விலகுவது குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய பயிற்சியாளரான லீமென் பதவி விலகிய பிறகு ஆஸ்திரேலிய களத்தில் ஒழுங்காக நடந்துகொண்டு சிறப்பாக விளையாடுவார்கள் என ஆஸ்திரேலிய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் நம்புகின்றனர்.