ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இந்திய அணிக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறிய குற்றச்சாட்டுக்கு ஹர்பஜன் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என தொடர்ந்து வெளிநாடுகளில் தோல்வியை தழுவி வந்த இந்திய அணிக்கு, புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் வெற்றி அமைந்துள்ளது. 

இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே ஆஸ்திரேலிய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடியது. எப்போதும் மிகச்சிறந்த பேட்டிங் அணியாக மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய அணி, இந்த முறை மிகச்சிறந்த வலுவான பவுலிங் யூனிட்டுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுடன் சென்றது இந்திய அணி.

பும்ரா, ஷமி ஆகிய இருவருமே மிரட்டலாக வீசினர். பவுன்ஸர்கள் மூலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அலறவிட்டனர். விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதை கடந்து காயமடைந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு வரவழைத்தனர். அந்தளவிற்கு இந்திய பவுலர்கள் அபாரமாகவும் மிரட்டலாகவும் வீசினர். 

சிட்னியில் நடந்த கடைசி போட்டியில் 4ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னின்ஸில் அந்த அணியை ஆல் அவுட் செய்தனர் இந்திய பவுலர்கள். 300 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்ததால் ஃபாலோ ஆன் பெற்ற ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. மழை வந்ததால் ஆட்டம் தடைபட்டது. ஒருவேளை மழை வராமல் இருந்து அந்த இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி முழுதாக ஆடியிருந்தால் இந்திய அணிதான் வெற்றி பெற்றிருக்கும். ஏனென்றால் இந்திய பவுலர்கள் கடந்த ஓராண்டாக அருமையாக வீசி ஒவ்வொரு போட்டியிலும் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறிய பேட்டிங் யூனிட் மற்றும் இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாத பவுலிங் யூனிட் ஆகிய இரண்டையும் பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி, தங்கள் அணியின் பலவீனத்தை ஒப்புக்கொள்ளாமல் நொண்டிச்சாக்கு சொல்வதில்தான் குறியாக உள்ளது.

நான்காம் நாள் ஆட்டம் முடிந்ததும் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இந்தியாவுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளன. எங்கள் அணியின் பலமே வேகமும் பவுன்ஸும் தான். ஆனால் சில ஆடுகளங்கள் ரோல் செய்யப்பட்டதால் எங்கள் பலமே காலியாகிவிட்டது. இந்தியாவில் நமக்கு பசுமையான ஆடுகளத்தை அமைத்து கொடுக்கிறார்களா என்றால் கிடையாது. நாம் மட்டும் ஏன் அவர்களுக்கு சாதகமாக ஆடுகளங்களை அமைக்கிறோம்? என கடுமையாக சாடியிருந்தார். 

ஆஸ்திரேலிய அணியின் அனுபவமற்ற பேட்டிங் வரிசையும் அந்த அணியின் மிரட்டல் இல்லாத பவுலிங்கும்தான் தோல்விக்கு காரணம். ஆனால் ஆடுகளங்கள்தான் பெரிய காரணியாக செயல்பட்டதை போன்ற தோற்றத்தை உருவாக்க நினைத்தார் டிம் பெய்ன். 

ஆனால் அதற்கு அனுமதிக்காத ஹர்பஜன் சிங், டிம் பெய்னுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து டுவீட் செய்துள்ள ஹர்பஜன் சிங், ஆடுகளங்கள் பிளாட்டாக அமைக்கப்பட்டதற்கு ஆஸ்திரேலிய அணி நன்றிதான் சொல்ல வேண்டுமே தவிர குற்றம் சொல்லக்கூடாது. ஏனெனில், அவர்கள் கேட்கும் வகையில் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருந்தால், இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலியாவை 200 ரன்களுக்கு உள்ளாகவே சுருட்டியிருப்பர். எனவே இதுபோன்ற நொண்டிச்சாக்குகளை சொல்வதை விடுத்து உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தி அதன்மூலம் ஆஸ்திரேலிய அணி நல்ல வீரர்களை உருவாக்கினால், ஆஸ்திரேலியாவின் பொற்காலம் திரும்ப கிடைக்கும் என்று ஹர்பஜன் பதிலடி கொடுத்துள்ளார்.