பயிற்சி போட்டியில் இந்தியாவை ஓடவிட்ட இளம் வீரர் ஆஸி. அணியில் சேர்ப்பு; யார் இந்த சாம் கான்ஸ்டாஸ்?
இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா தொடர்
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து விட்டன. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. அதே வேளையில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்குவதால் பாக்ஸிங் டே டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஹேசில்வுட்வுக்கு பதில் யார்?
ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல வேண்டுமானால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளும் முக்கியமாகும். இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல மீதமிருக்கும் 2 போட்டிகளையும் கட்டாயம் வெல்ல வேண்டும். ஆஸ்திரேலியா மீதமிருக்கும் 2 போட்டிகளையும் வென்றால் எளிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு எளிதில் சென்று விடலாம்.
இதனால் 4வது மற்றும் 5வது டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்க்கும் நிலையில், கடைசி 2 போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 3வது டெஸ்ட்டில் காயம் அடைந்த ஹேசில்வுட் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சீன் அபோட், ஸ்காட் போலண்ட், ஜே ரிச்சர்ட்சன் என 3 பவுலர்கள் இருக்கும் நிலையில், இவர்களில் யாராவது ஒருவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும்.
19 வயது அதிரடி வீரர் சேர்ப்பு
முதல் 3 டெஸ்ட் போட்டியில் படுமோசமாக பேட்டிங் செய்த இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை ஆட்டக்காரரான 19 வயதுடைய சாம் கான்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் உள்ளூர் கிரிக்கெட்டில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர் 11 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 3 அரைசதங்களுடன் 718 ரன்கள் குவித்துள்ளார். மேலும் இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அதிரடி சதம் (97 பந்துகளில் 107 ரன்கள்) விளாசியதால் அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும் சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டி20 தொடரான பிக் பாஷ் லீக்கில் அறிமுகமான இவர் 27 பந்தில் 56 ரன்கள் நொறுக்கியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல்
இதுதவிர 31 வயதான ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டருக்கும் முதன்முறையாக அணியில் இடம் கிடைத்துள்ளது. இவர் முதல் தர கிரிக்கெடில் 5297 ரன்களும், 148 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்),டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஸ்சேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், ஜே ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.